வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி: 11 பேர் கைது

திருகோணமலையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

by Staff Writer 12-10-2019 | 4:29 PM
Colombo (News 1st) திருகோணமலை - சூடைக்குடாவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்த 1354 கிலோகிராம் மீனும் கெப் வாகனமும் 2 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மூதூர் பகுதியைச் சேர்ந்த 27 தொடக்கம் 36 வயதிற்கிடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கேநபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மூதூர் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால், கடலில் மீன்கள் இறக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் அம்பிகாநகர் கடற்பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சங்குகளைக் கொண்டுசென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 560 சங்குகளும் டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. வேலணையைச் சேர்ந்த 31 , 34 மற்றும் 40 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.