ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை இல்லை: இரா.சம்பந்தன்

by Staff Writer 12-10-2019 | 6:53 PM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் அறிந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடமே வினவ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அல்லாது தனிப்பட்ட முறையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜானாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்ததாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜக்ஸவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பின் முன்னாயத்த ஏற்பாடாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கோட்டாபயவை சந்தித்ததாக பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இந்த சந்திப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலேயே இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பிலேயே தான் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்ததாக அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சந்திக்க விரும்புவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார். ​ தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சந்திக்க விரும்பினால், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தொடர்புகொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தான் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கூறினார். ஜனாதிபதி வேட்பாளர்களுடனான சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தற்போது பேச்சுவார்த்தைகளே ஆரம்பித்திருப்பதாகவும் தீர்மானித்த பின்னர் தெரிவிப்பதாகவும் அவர் பதிலளித்தார்.