by Staff Writer 11-10-2019 | 9:20 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன.
ரயில் என்ஜினில் அகப்பட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு 9.30 அளவில் பயணித்த மீனகயா கடுகதி ரயிலில், வெலிகந்த - அசேலபுர பகுதியில் மூன்று யானைகளும் மோதியுள்ளன.
சோமாவதி வனப்பகுதியில் இருந்து மாதூறுஓயா வனப்பகுதியை நோக்கி பயணித்த சந்தர்ப்பத்தில் ரயிலில் யானைகள் மோதுண்டுள்ளதாக வெலிகந்த வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் கூறினர்.
விபத்தை அடுத்து ரயில் தடம் புரண்டுள்ளதுடன், வெலிகந்த வரை ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை ரயிலில் அகப்பட்டிருந்ததுடன், பாரிய பிரயத்தனத்தின் பின்னர் யானையின் உடல் வௌியில் எடுக்கப்பட்டது.
திருகோணமலை ரயில் மார்க்க நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தியதன் பின்னர், மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது.
ரயிலில் மோதிய ஏனைய இரண்டு யானைகளையும் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.
இந்த பகுதியில் அதிகளவில் யானைகள் ரயிலுடன் மோதுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.