எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நிறைவு: இரவு 10 மணிக்கு முன்னர் முடிவு அறிவிக்கப்படவுள்ளது

by Staff Writer 11-10-2019 | 3:27 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நிறைவடைந்து வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. வாக்களிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதாரபத்திரன தெரிவித்தார். இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டிடுவதுடன், அவர்களிலிருந்து 28 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகப்பூர்வ முடிவை இன்று இரவு 10 மணிக்கு முன்னர் வௌியிட முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எல்பிட்டியவிற்கு சென்றிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.