அரசாங்கம் பழி வாங்குவதற்கே காலத்தை செலவிட்டதாக மஹிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு

அரசாங்கம் பழி வாங்குவதற்கே காலத்தை செலவிட்டதாக மஹிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

11 Oct, 2019 | 8:12 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பு குருநாகல் – வில்கொட பிரதேசத்தில் நேற்று (10) நடைபெற்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, டி.பி.ஏக்கநாயக்க மற்றும் தாரநாத் பஸ்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, தமது வேட்பாளரின் வாக்குகளை சிதறடிப்பதற்கே 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இந்த நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர் ஒருவரையே தமது கட்சி முன்நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் தமக்கு சேறு பூசப்பட்டதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் 2015 ஆம் ஆண்டு கூறிய கருத்துக்களையே இன்றும் கூற ஆரம்பித்துள்ளதாகவும் கடந்த நான்கரை வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட விடயங்களைக் கூறவில்லை எனவும் மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்தார்.

மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் பேசவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதாகக் கூறி உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரை நீக்கிய முறை தொடர்பில் பேசவில்லை. இது சீல் துணிகளை பகிர்ந்தளித்தமைக்காக ஜனாதிபதி செயலாளரை சிறைக்கு அனுப்பிய அரசாங்கமாகும். இந்த அரசாங்கம் அரச அதிகாரிகளை பாதுகாப்பதில்லை. அதனால் இந்த அரசாங்கம் உங்களை காப்பாற்றுவார்கள் என எண்ண வேண்டாம்

எனவும் அவர் கூறினார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் பழி வாங்குவதற்கே நேரத்தை செலவிட்டதால் மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டினார்.

இந்த அரசாங்கம் தமது அரசாங்கம் பெற்ற கடனை விட மூன்று மடங்கு கடனைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தாம் பெற்ற வௌிநாட்டுக் கடனை அடைத்ததில் எஞ்சிய பணத்தை என்ன செய்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்