தனிப்பட்ட தேவைக்காக கட்சியை சீரழிக்க வேண்டாம்: தயாசிறிக்கு சந்திரிக்கா தெரிவிப்பு

by Staff Writer 10-10-2019 | 8:19 PM
Colombo (News 1st) தனிப்பட்ட தேவைகளுக்குள் மட்டுப்பட்டு, பெறுமதியான கட்சி சீரழிய இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க , சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு அறிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு அனுப்பிய பதிவு, முன்னாள் ஜனாதிபதியின் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அமைப்பாளர்களில் 90 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மொட்டுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டமை கட்சியை முழுமையாக தாரைவார்க்கும் செயற்பாடு என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் பதவியைக் கைவிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்திருந்தால், கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்று கட்சியை மீளக் கட்டியெழுப்ப தயாசிறி ஜயசேகரவிற்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கு குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடனான கூட்டணியின்றி, கூட்டணிக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கான சக்தியும் தொலைநோக்கும் தலைவரிடம் இருக்காமையே கட்சியின் பின்னடைவிற்கு காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இடமளித்து, கொலை மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் நாடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது வலுவான நிலையை அடைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.