நாம் உருவாக்கும் புதிய நாட்டில் திருட்டுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் இடமில்லை: பிரசாரக் கூட்டத்தில் சஜித் தெரிவிப்பு

by Bella Dalima 10-10-2019 | 3:31 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் இன்று பிற்பகல் நடைபெற்றது. 'ஒன்றாக முன்னோக்கி செல்வோம்' என்ற தொனிப்பொருளில் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இதன்போது அமோக வரவேற்பளிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்த பிரசாரக் கூட்டத்தில் கலாநிதி தம்பர அமில தேரர் பின்வருமாறு உரையாற்றினார்,
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தான் நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியானதும் அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வதாக கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார். அநீதியான முறையில் அவர்களை சிறையில் அடைத்தது யார் என கேட்கின்றேன். மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களைத் தவறான முறையில் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு அனுப்பினர். அவர்களை ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கும் கப்பம் பெறுவதற்கும் அழைத்துச் சென்றனர். அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களே இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தேகநபர்கள். அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களை விடுதலை செய்வதாக தற்போது இவர் கூறுகின்றார். நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலே நடைபெறவுள்ளது. நீதிபதிகளை தெரிவு செய்யும் தேர்தல் அல்ல.
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நவீன் திசாநாயக்க, பொதுமக்களின் இதயத்துடிப்பை அறியாதவர் கோட்டாபய ராஜபக்ஸ என குறிப்பிட்டார். இந்நாட்டு மக்கள் தம் மத்தியில் இருந்து உருவான ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்வர் எனவும் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். அவ்வாறு தெரிவு செய்யும் பட்சத்தில், ஒரு இளம் தலைவர் உருவாகுவார் எனவும் அது நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானால் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவார் எனவும் பசில் ராஜபக்ஸவும் நாமல் ராஜபக்ஸவும் அமைச்சரவையில் இடம்பெறுவர் எனவும் அவர்களின் ஏனைய உறவினர்கள் உயர் பதவிகளை வகிப்பர் எனவும் சுட்டிக்காட்டிய நவீன் திசாநாயக்க, அவ்வாறான குடும்ப அரசியல் இந்நாட்டில் மீண்டும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என கூறினார். இதேவேளை, இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திராணி பண்டார, கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவருக்காக காத்திருந்து, தற்போது அந்தக் கனவு நிறைவேறும் சந்தர்ப்பம் உருவாகியிருப்பதை இன்று கூடியிருக்கும் கூட்டத்தைக் காண்கையில் உறுதியாவதாகக் கூறினார். மேலும்,  மஹிந்த ராஜபக்ஸவின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதையும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு செவி சாய்க்காததால் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வீட்டிற்கு அனுப்பப்பட்டதையும் இந்நாட்டு பெண்கள் மறந்திருக்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டினார். இந்தத் தேர்தல் ஒரு நாணய சுழற்சியைப் போன்றது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உதாரணம் காட்டி இந்த பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இந்நாட்டு மக்களுக்கு குடும்பமா நாடா  என தீர்மானிக்கும் இரண்டு தெரிவுகள் இருப்பதாகவும், நாட்டை ஆதரிக்கும் நபர்கள் அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தினார். இதேவேளை, இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்களிடமிருந்து தோன்றிய தலைவர் சஜித் பிரேமதாச என புகழாரம் சூட்டினார். உங்களது ஜனாதிபதி ஒரு பொதுமக்களின் தலைவராக இருக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா என பிரதமர் இதன்போது கேள்வி எழுப்பினார். பிரதமரின் உரையை அடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இதன்போது, தாம் உருவாக்கவுள்ள புதிய நாட்டில் திருட்டுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் இடமில்லை என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். இந்நாடு இதுவரை கண்ட அரசாங்கங்களில் தமது அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக அமையும் எனவும் சஜித் பிரேமதாச சூளுரைத்தார். அவ்வாறான அரசாங்கத்திற்கு எதிராக எவரேனும் செயற்பட விரும்பினால், அவர்கள் கண்டிப்பாக தமது பொதிகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், போரில் ஈடுபட்டு வெற்றியீட்டி தம்மை நிரூபித்த ஒருவருக்கே அந்தப் பொறுப்பை கையளிக்க வேண்டும் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அப்பொறுப்பு சரத் பொன்சேக்காவிற்கு வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் மேம்பாட்டிற்காக கொள்கைப் பிரகடனங்களை உருவாக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அடுத்து, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர்  உரை நிகழ்த்தினர்.