பொதுஜன பெரமுனவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்; சுதந்திரக் கட்சியின் துமிந்தவும் பங்கேற்பு

by Bella Dalima 09-10-2019 | 8:12 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரம் - சல்காது மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களின் பங்கேற்புடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கோட்டாபய ராஜபக்ஸ பொதுக்கூட்டத்திற்கு இன்று வருகை தந்தார். பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய துமிந்த திசாநாயக்க, நாளைய தினம் (10) பொதுஜன பெரமுனவுடன் தாம் முதலாவது உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியுடன் வலிமையான நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்றுவதாகவும் நுண்கடன், விவசாயக் கடன்களை விடுவிப்பதாகவும் அழிவடைந்த பயிர் செய்கைகளுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்தார். கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் உரையாற்றிய பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மொரகஹகந்த நீர் வடக்கிற்குக் கிடைக்கும் என நினைவுபடுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டார்.