பிரெக்ஸிட்டில் கைச்சாத்திடுவது கடினம் - அயர்லாந்து

கால அவகாசத்திற்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது கடினம் - அயர்லாந்து தலைவர்

by Staff Writer 09-10-2019 | 12:35 PM
Colombo (News 1st) பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது கடினமானது என அயர்லாந்து தலைவர் லியோ வராட்கர் (Leo Varadkar) தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் இடைவௌியொன்று காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதேநேரம், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை நச்சுத்தன்மையை அடைந்துள்ளதாக Leo Varadkar குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பிரெக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இந்த வாரத்தில் போரிஸ் ஜோன்சனை சந்திக்கவுள்ளதாக Leo Varadkar தெரிவித்துள்ளார். இம் மாத இறுதிக்குள் ஒப்பந்தங்களற்ற பிரெக்ஸிட் நடவடிக்கையைத் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விரைந்து செயலாற்ற வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது நாட்டுக்காகவும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்காகவும் பிரித்தானியாவுடன் ஒப்பந்தமொன்றை எட்டுவதற்காக இறுதிவரை போராடவுள்ளதாக, பிரதமர் போரிஸ் ஜோன்சனுடன் 45 நிமிடங்கள் வரை கலந்துரையாடிய அயர்லாந்து தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு இடையிலான மாநாட்டுக்கு முன்னர் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.