தேர்தல் அலுவலகங்களை அமைப்பது குறித்து அறிவுறுத்தல்

வேட்பாளர்களுக்கான தேர்தல் அலுவலகங்கள் குறித்து அறிவுறுத்தல்

by Staff Writer 08-10-2019 | 10:00 AM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களுக்கு 12 000 இற்கும் அதிகமான தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, முழு இலங்கைக்கும் ஒரு தலைமைக் காரியாலயத்தை ஸ்தாபிக்க முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்குமான தனித்தனி மாவட்ட அலுவலகங்களையும் ஸ்தாபிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, வேட்பாளர் ஒருவருக்கு 22 மாவட்ட தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபிக்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களில் 100 சதுர அடியைக் கொண்ட பதாதைகளை வைப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளூடாக 18 பேரும் வேறு அரசியல் கட்சிகளூடாக இருவரும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.