அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராய்வு

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராயும் சிங்கப்பூர் சட்ட மா அதிபர் திணைக்களம்

by Staff Writer 08-10-2019 | 5:13 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது ஆராயப்படுவதாக சிங்கப்பூர் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கி முறிகள் மோசடியின் பிரதான சந்தேகநபரான அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான அனைத்து ஆவணங்களும் கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறினார். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் ஏல விற்பனையின் போது, அரசிற்கு 68 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் அர்ஜூன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அர்ஜூன மகேந்திரளை நாடு கடத்துவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் அடங்கிய 21,000 பக்கங்களைக் கொண்ட கோவை, சட்ட மா அதிபரால் வௌிவிவகார அமைச்சினூடாக அண்மையில் சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.