அறுவைக்காட்டில் கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையில் மீண்டும் சிக்கல்

அறுவைக்காட்டில் கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையில் மீண்டும் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2019 | 8:57 pm

Colombo (News 1st) அறுவைக்காடு கழிவகற்றல் பகுதியில் வாயு நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் தாங்கிகள் நேற்று (07) வெடித்ததை அடுத்து, கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அறுவைக்காடு கழிவகற்றல் பகுதி நோக்கிப் பயணித்த 28 டிப்பர் வாகனங்கள் நேற்று ஜா-எல பகுதியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அறுவைக்காடு கழிவகற்றல் பகுதியில் வாயு நிரப்பப் பயன்படுத்தப்படும் தாங்கிகள் நேற்றிரவு 8 மணியளவில் வெடித்தன.

பெருந்தெருக்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவிடம் இந்த விடயம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இது திட்டமிட்ட சூழ்ச்சியா அல்லது நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் ஒப்பந்தக்காரரின் குறைபாடா என்பது குறித்து ஆராய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்தில் வாயு நிரப்பும் தாங்கிகள் புனரமைக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் அங்கு கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீத்தேன் வாயு வௌியானமையினால் ஏற்பட்ட விபரீதத்தைப் போன்று இங்கும் இடம்பெறாமல் விரைவில் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்