நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது

நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது

by Staff Writer 07-10-2019 | 5:07 PM
Colombo (News 1st) நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பகதுர் மஹாரா (Krishna Bahadur Mahara) கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையுடன் தனது குடியிருப்புத் தொகுதிக்கு வருகைதந்த முன்னாள் சபாநாயகர், தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். நேபாளத்தின் முன்னாள் சபாநாயகரான கிருஷ்ணா பகதுர் மஹாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எவ்வாறாயினும், மாவோயிஸ்ட்டின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணா பகதுர் மஹாரா தம் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார். தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே, தாம் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நேபாளத்தில் பல வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் 2006 ஆம் ஆண்டு நிறைவடைந்தததுடன், முன்னாள் சபாநாயகர் மாவோயிஸ்ட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளால் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.