ஜனாதிபதித் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல்

by Staff Writer 07-10-2019 | 8:14 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளூடாக 18 பேரும் வேறு அரசியல் கட்சிகளூடாக இருவரும் 15 சுயேச்சை வேட்பாளர்களும் இம்முறை போட்டியிடுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்களில் 35 பேர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ததுடன், 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. சமல் ராஜபக்ஸ, குமார வெல்கம, சப்ரகமுவ முன்னாள் முதலமைச்சர் மஹீபால ஹேரத் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனினும், சமல் ராஜபக்ஸ மற்றும் மஹீபால ஹேரத் ஆகியோர் வேட்பு மனு கையளிக்கும் இடத்திற்கு வந்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, தேசிய மக்கள் கட்சியூடாக வேட்புமனு கையளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வேட்பு மனுவை கையளித்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும் புதிய சமசமாஜக் கட்சி சார்பில் பெத்தேகமகே நந்திமித்ரவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சோசலிச சமத்துக் கட்சியில் வஜிரபானி விஜேசிறிவர்தனவும் நவ சின்ஹல உறுமய சார்பில் சரத் மனேமேந்திரவும் ஜாதிக சங்வர்தன பெரமுன சார்பில் ரொஹான் பள்ளேவத்தவும் போட்டியிடுகின்றனர். ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்கி சார்பில் ஏ.எஸ்.பீ. லியனகே போட்டியிடுவதுடன், பத்தரமுல்லே சீலரத்தன தேரர் ஜனசெத பெரமுனவில் களமிறங்கியுள்ளார். எமது மக்கள் சக்தி கட்சி சார்பில் பிரசன்ன பெரேரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் ஆரியவங்ச திசாநாயக்க போட்டியிடுகின்றார். சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் வேட்பு மனுவை கையளித்துள்ளார். ஜனநாயக தேசிய இயக்கத்தில் அருண டி சொய்சாவும் ருஹூணு ஜனதா பெரமுனவில் அஜந்த டி சொய்சாவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒக்கொம வெசியோ - ஒக்கொம ரஜவரு அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பிரியந்த முணிஹத் எதிரிசிங்க களமிறங்கியுள்ளார். எமது தேசிய முன்னணி சார்பில் சுப்ரமணியம் குணரத்னம் வேட்னுமனு தாக்கல் செய்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்களாக அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், ஜயந்த கெடகொ, சிறிபால அமரசிங்க, மில்ரோய் பெர்னாண்டோ, சரத் விஜிதகுமார கீர்த்திரத்ன, அனுருத்த பொல்கம்பொல ஆகியோர் போட்டியிடுகின்றனர். அத்துடன், சமரவீர வீரவன்னி, அஷோக வடிக மங்காவ, ரஜீவ் விஜேசிங்க, எம்.கே. சிவாஜிலிங்கம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இல்லியாஸ் ஐதுரூஸ் மொஹமட், பியசிறி விஜேநாயக்க, சமன்சிறி ஹேரத், அஹமட் ஹசன் மொஹமட் அலவி ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் முற்பகல் 11 மணிக்கு நிறைவடைந்ததுடன், ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கு 11.30 மணி வரை நேரம் வழங்கப்பட்டிருந்தது. 2 வேட்பு மனுக்களுக்கு எதிராக இதன்போது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட 2 ஆட்சேபனைகளும் சட்டத்தின் ஒழுங்கு மற்றும் தொடர்புகள் இன்மையால் நிராகரிக்கப்பட்டன. இந்த 35 வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு தலா இரு பிரதிநிதிகள் வீதம் அனுப்ப முடியும். அவ்வாறாயின் 70 பிரதிநிதிகள் வாக்குச்சாவடிக்குச் செல்வார்கள். ஒரு வாக்கெண்ணும் நிலையத்தில் 175 வாக்கெண்ணும் முகவர்கள் காணப்படுவார்கள். இந்தத் தேர்தலுக்காக 4000 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு நாம் எதிர்பார்த்தோம். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் நாம் எதிர்பார்த்ததை விட அதிக தொகை செலவாகும். நீங்கள் அனுப்பும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடியுமாயின் வாக்கெண்ணும் நிலையங்களை தெரிவுசெய்வது எமக்கு இலகுவாக அமையும் என தயவாக கேட்டுக்கொள்கின்றோம். 160 ஐ விட அதிகரித்தால் இவ்வாறான பெரிய மண்டபங்களைத் தேட வேண்டியேற்படும். எண்ணிக்கை அதிகரித்தால் அனைவரையும் உள்வாங்கக்கூடிய பாரிய மண்டபங்களைப் பெற்று ஒட்டுமொத்த தேர்தல் பிரதேசத்தினதும் வாக்குகளை ஒரு மண்டபத்தில் வைத்து 2, 3 நாட்களாக எண்ண நேரிடும்
என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.