பாகிஸ்தானைத் தோற்கடித்த இலங்கை அணி

பாகிஸ்தானைத் தோற்கடித்த இலங்கை அணி

by Staff Writer 06-10-2019 | 7:24 AM
Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக தனுஷ்க குணதிலக்க 8 பவுன்டரிகள் 1 சிக்சருடன் 38 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும் அறிமுக வீரரான பானுக்க ராஜபக்‌ஷ 32 ஓட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவர் தசுன் சானக்கவினால் 17 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது. மொஹமட் ஹஸ்னைன் ஹெட்ரிக் பெறுதியுடன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் தடுமாற்றமான ஆரம்பத்துக்கு மத்தியில் 22 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது. பாபர் அஸாம் 13 ஓட்டங்களுடன் வெளியேற, 16 மாதங்களின் பின்னர் அணிக்கு திரும்பிய அஹமட் ஷெஷாட் 4 ஓட்டங்களுடன் போல்டானார். பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை அணி பாகிஸ்தானை வெற்றிகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.