கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 06-10-2019 | 7:30 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதித் தினம் இன்றாகும். இன்று (06) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டுப் பணத்தை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இதுவரை 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 வேட்பாளர்களும் சுயாதீனமாக 14 பேரும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளை (07) முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான 2 மணித்தியால காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதேவேளை, இன்றும் நாளையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, பொரளை, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (07) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இராஜகிரிய ஜனாதிபதி, ஹேவாவிதாரண மற்றும் ஹேவாவிதாரண கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் S.G. விஜயபந்து குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளதால் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.