இந்திய பெரிய வெங்காய இறக்குமதி நிறுத்தம்

இந்திய பெரிய வெங்காய இறக்குமதி நிறுத்தம்

by Staff Writer 06-10-2019 | 7:45 AM
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் சீனாவிலிருந்து மாத்திரம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது, பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 150 ரூபா அல்லது அதற்கு குறைந்த விலையில் அமைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியும் 40 ரூபாவிலிருந்து 39 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக பெரிய வெங்காயம் கூடிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பிலும் ஆராயப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 80 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.