10 ஆவது நாளாக ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு: சுமார் 160 மில்லியன் ரூபா நட்டம்

10 ஆவது நாளாக ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு: சுமார் 160 மில்லியன் ரூபா நட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2019 | 7:44 pm

Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தொடர்பில் அத்தியாவசிய சேவை சட்டத்திற்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

பணிக்குத் திரும்பும் எதிர்பார்ப்பிலுள்ள ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் 160 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க கூறினார்.

கணக்காய்வாளர் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, 2017 டிசம்பர் 31ஆம் திகதியிலிருந்து ரயில்வே திணைக்களம் 7.59 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரி, ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று பத்தாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

இதனால் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ஊழியர்களை பொது முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், தமது சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கிட்டும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு மத்தியில் இன்றும் 12 தடவைகள் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

சாதாரணமாக நாளொன்றுக்கு 225 தடவைகள் ரயில் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

வார நாட்களில் அலுவலக ரயில் சேவை 40 தடவையும், வார இறுதி நாட்களில் அலுவலக ரயில் சேவை 20 தடவையும் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் கூறியது.

நாளொன்றுக்கு சுமார் 4 இலட்சம் பயணிகள் ரயிலில் பயணிப்பதுடன், இதனால் நாளொன்றுக்கு சுமார் 16 மில்லியன் ரூபா வருமானம் தமக்குக் கிடைப்பதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

இதற்கமைய, ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் இதுவரை சுமார் 160 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்