யாருக்கு வாக்களிக்க வேண்டும்: ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

by Staff Writer 05-10-2019 | 7:59 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. 'சரியான பாதையில் தீர்மானம்' எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் ஜனாதிபதி பின்வருமாறு உரை நிகழ்த்தினார்,
நான் நவம்பர் மாத நடுப்பகுதியில் இந்த பதவிக்காலத்தினை நிறைவு செய்து, எனது பதவிக்காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒருவராக அரசியலில் அடுத்த நடவடிக்கைகளுக்கு செல்வேன் என்பதை கூறிக்கொள்கின்றேன். எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி. நீங்கள் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கு வாக்கினை பாவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் செய்பவர்கள் தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். நாட்டிற்காக எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர், தன்னலனுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர் என தேடிப்பார்க்க வேண்டும். நாட்டிற்காக அரசியல் செய்யும ஏராளமானவர்களை மக்கள் சேவகர்களாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கின்றது.  கட்சியாயினும் நண்பராயினும் உறவினராயினும் ஊழல் மோசடிக்கு நான் இடமளிக்கமாட்டேன்.