மீண்டுமொரு துயர சம்பவம்: சவுதியிலிருந்து சடலமாகத் திரும்பிய சந்தன மேரி

by Staff Writer 05-10-2019 | 8:28 PM
Colombo (News 1st) குடும்ப வறுமையைப் போக்குவதற்காக பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்ற பெண் சடலமாக திரும்பிய மற்றுமொரு துயர சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது. 2017ஆம் ஆண்டில் சவுதி சென்ற அவிசாவளையைச் சேர்ந்த சந்தன மேரியின் பூதவுடல் நேற்று (04) அவரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அவிசாவளை - ஹிகுரல, வெரலிப்பிட்டியவை சேர்ந்த சந்தன மேரி செல்லையாவிற்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக இவர் 2017ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். பணிபுரியும் இடத்தில் தான் தொடர்ந்தும் கொடுமைப்படுத்தப்படுவதாக சந்தன மேரி உறவினர்களிடம் பல முறை தொலைபேசியூடாகக் கூறியுள்ளார். அவரை நாட்டிற்கு அழைப்பதற்கு குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பலனளிக்கவில்லை. இந்த நிலையில், சந்தன மேரி உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினருக்கு கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்வியுற்று நகரிலிருந்து வீடு திரும்பிய சந்தன மேரியின் கணவர் விபத்திற்குள்ளாகியதில் அவரின் காலில் முறிவு ஏற்பட்டது. நடப்பதற்கே சிரமப்படும் சந்தன மேரியின் கணவரால் குடும்பத்தின் வறுமையைப் போக்க முடியவில்லை சந்தன மேரியின் பூதவுடலை வீட்டிற்குள் கொண்டு செல்ல அவர்கள் வசிக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர் சம்மதிக்கவில்லை. இதனால் பூதவுடல் அடைக்கப்பட்ட பெட்டியை வீட்டிற்குள் கொண்டு செல்லாது வௌியிலேயே வைத்திருந்து இன்று பகல் நல்லடக்கம் செய்துள்ளனர். குடும்ப வறுமையால் மூத்த பிள்ளைகள் இருவரும் கல்வியை இடைநடுவில் கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டுப் பணிப்பெண்களை அனுப்பி அந்நியச்செலாவணியை ஈட்டும் ஆட்சியாளர்கள் இவ்வாறான சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமல்லவா?