தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விசேட பாதுகாப்பு

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விசேட பாதுகாப்பு

by Staff Writer 05-10-2019 | 4:34 PM
Colombo (News 1st) இராஜகிரியவிலுள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாளை (06) காலை முதல் விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் விசேட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுதினம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் ஆணைக்குழுவை அண்மித்த பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகளில் 1200-க்கும் அதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இந்த எண்ணிக்கைக்கு சமமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார். இதனிடையே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தையில் அனுமதியின்றி உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அனுமதி பெற்று உட்பிரவேசிக்கும் வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.