கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் மலையக இளைஞர் மாநாடு

by Staff Writer 05-10-2019 | 8:11 PM
Colombo (News 1st) மலையக இளைஞர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக இளைஞர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து மாநாடு ஆரம்பமாகியது. இந்த சந்தர்ப்பத்தில் முத்தையா முரளிதரனின் மனைவியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இம்மாநாட்டில் கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு உரையாற்றினார்,
எனது பொருளாதார அபிவிருத்தித் திட்டம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் அல்ல. மக்களை கேந்திரமாகக் கொண்ட பொருளாதார திட்டமாகும். தோட்ட பொருளாதாரம் முக்கியமானதாகும். அது தொடர்பில் பேசும் போது, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது? அவர்களின் கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது என்பவை செய்யக்கூடிய விடயங்கள். வீடமைப்புத் திட்டங்களையே நான் பிரேரிக்கின்றேன். நான்கு வீடுகளை ஒன்றாக நாம் நிர்மாணித்துள்ளோம். எனினும், அந்த நிலத்தை பயன்படுத்தி அங்கு வாழ்பவர்களுக்கு தேவையான மைதானம், பயிர் செய்கைக்கு அதிகளவு காணிகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய வீடுகளை நிர்மாணிக்கவே நான் யோசனை முன்வைக்கின்றேன்.
மாநாட்டிற்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இடையில் பகிரங்க கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.