ஏப்ரல் 21 தாக்குதல்: முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 05-10-2019 | 3:48 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு , முதலாம் மாடி, 05 ஆம் மண்டபம், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு - 07 என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும். இதேவேளை, 011 2 677 673 என்ற Fax இலக்கத்தினூடாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். அதிகார துஷ்பிரயோகம், பொருட்படுத்தாமை, பின்வாங்குதல், பொறுப்புணர்ந்து செயற்படாமை உள்ளிட்ட காரணிகளால் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள், மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் முக்கிய கடப்பாடாகும். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவானதும் பக்கசார்பற்றதுமான விசாரணைகளை நடத்தி, பயங்கரவாத செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் ஆராய்தல் என்பன ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.