இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஒரே மேடையில் கூடிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

by Bella Dalima 05-10-2019 | 9:04 PM
Colombo (News 1st) இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடைக்கு இன்று அழைக்கப்பட்டனர். சுகததாச உள்ளக அரங்கில் இன்று மாலை 'மக்கள் மேடை' நிகழ்வு இடம்பெற்றது. மார்ச் 12 அமைப்பு, பெஃப்ரல் அமைப்பு மற்றும் எவ்ரில் இளைஞர் வலயமைப்பு ஆகியன இணைந்து மக்கள் மேடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள்மயப்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். ஒரே மேடையில் இருந்து கொள்கை ரீதியான விவாதத்தில் ஈடுபடுவதற்காக, ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த தேர்தல்களின் போது 2 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிகளை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிப்படையில் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், கோட்டாபய ராஜபக்ஸ இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை.