கோட்டாபய தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது

by Staff Writer 04-10-2019 | 3:14 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை, விசாரணையை நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரதும் சமர்ப்பணங்களை சமர்ப்பிக்க மாலை 3.15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 9.30-க்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 301ஆவது அறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இரட்டை பிராஜாவுரிமையை வழங்கும் வகையில், 2005 ஆம் அண்டு நவம்பர் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் சட்டப்பூர்வமற்றது அல்லது போலியானது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதென இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.