பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு அறிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2019 | 3:32 pm

Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்ற நிலையில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் இன்று முற்பகல் 22 ரயில்கள் கோட்டை வரை சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி, பாணந்துறை , கம்பஹா , சிலாபம் , மஹவ, அவிசாவளை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலிருந்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதனிடையே, ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புமாறு ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் செயற்படுமாறு ரயில்வே பொது முகாமையாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க கூறியுள்ளார்.

எனினும், ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டாலும் தமது பிரச்சினைகளுக்கான தீர்வு கிட்டும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ், இந்த விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்