ஜனாதிபதி தேர்தலை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2019 | 3:22 pm

Colombo (News 1st) நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, காலி மாநகர முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வா தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ.பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவைத் தொடர எதிர்பார்க்கவில்லை எனவும் அதனை​ திரும்பப்பெற அனுமதி வழங்குமாறும் கோரியுள்ளார்.

எவ்வாறயினும், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டாமென தெரிவித்து மனுவை நிராகரித்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் செயற்பாட்டை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்புக்குமாறும் கோரப்பட்ட இந்த மனு, நேற்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் 6 வருடங்களுக்கே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், அவர் ஜனாதிபதியாக தெரிவாகி 5 வருடங்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வரத்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நிறுத்துமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் சட்ட மா அதிபரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்