மிடாக் புயல் தாக்கம்: தென் கொரியாவில் 6 பேர் பலி

மிடாக் புயல் தாக்கம்: தென் கொரியாவில் 6 பேர் பலி, ஜப்பானில் வெள்ள அபாய எச்சரிக்கை

by Bella Dalima 03-10-2019 | 4:39 PM
தென் கொரியாவில் மிடாக் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவைத் தாக்கிய மிடாக் புயல் காரணமாக நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடும் சேதம் விளைவித்துள்ள இந்த புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இதுவரை 500 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரு சுற்றுலா ரயில் தடம்புரண்டது. மழையால் சாலைகள் பல கடுமையாக சேதமடைந்துள்ளன. நாட்டின் தெற்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், தென் கொரியாவின் 1,000 ஹெக்டேயர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிடாக் புயல் காரணமாக இதுவரை 6 பேர் உயரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேரை காணவில்லை எனவும் சில உள்ளூர் பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, மிடாக் புயல் காரணமாக ஜப்பானில் கனமழை பெய்து வரும் நிலையில், 43,000 பேருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிடாக் புயல் காரணமாக, ஜப்பான் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உ ருவாகி, கனமழை பெய்து வருகிறது. கனமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொச்சி மாகாணத்தில் 43,000 மக்களை ஊரைவிட்டு வெளியேறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி - டோசா மற்றும் சுசாகி ஆகிய நகரங்களில் 120 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக ஏற்படும் நிலச்சரிவு , வெள்ளம் தொடர்பான விபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜப்பான் அரசு முன்னெடுத்து வருகிறது.