ஜனாதிபதி தேர்தலை ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்

ஜனாதிபதி தேர்தலை தமிழ் கட்சிகள் ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும்: தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தல்

by Staff Writer 03-10-2019 | 8:44 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் கட்சிகள் ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றது. பேரவையின் சுயாதீனக் குழுவே இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுயாதீனக் குழுவில் சமயத்தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் நிபுணர்கள் உள்ளிட்ட11 பேர் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுப்பதை வலியுறுத்தும் நோக்கிலும் சுயாதீனக்குழுவின் உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்து வருகின்றனர். இந்த சுயாதீனக் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் நேற்று (02) சந்தித்துக் கலந்துரையாடியதாக பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து கலந்துரையாடியது.