ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு

by Staff Writer 03-10-2019 | 10:32 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளராக சஜித் பிரேமதாசவைப் பெயரிடுவதற்கான பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் 2019 ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் கட்சியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) காலை ஆரம்பமானது. ஜனாதிபதி வேட்பாளர் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மக்கள் பிரநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளும் விசேட மாநாட்டில் பங்கேற்றன. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளராக சஜித் பிரேமதாசவைப் பெயரிடுவதற்கான பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.
2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரேரிப்பதற்கும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளினும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பினருடைய ஆதரவை வழங்கி பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்வோம் என பிரேரிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.