SLC நிறுவன நிதி மோசடி இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி

இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி

by Staff Writer 03-10-2019 | 9:21 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக வெளிக்கொணரப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்றது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் கணக்காய்வின் மூலம் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நிதியை வௌிநாட்டு வங்கியில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டமை தொடர்பாக தகவல் வெளியாகி இன்றுடன் ஓராண்டும் 23 நாட்களும் ஆகின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வேறு வங்கிக் கணக்கிற்கு அனுப்ப எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி அறிவித்தது. இதற்கு முன்னர் தென் ஆபிரிக்க கிரிக்கெட் விஜயத்திற்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய இறுதிக்கட்ட கொடுப்பனவான 1,87,000 அமெரிக்க டொலர் நிதி வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. தென் ஆபிரிக்க விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைக்க வேண்டிய இரண்டாம் கட்டக் கொடுப்பனவான 4,36,541 அமெரிக்க டொலர் நிதியை Wells Fargo எனும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டதாக கணக்காய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இங்கிலாந்து விஜயத்திற்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய முதற்கட்டக் கொடுப்பனவான 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஹாங்காங்கில் அமைந்துள்ள Fanya Silu எனும் நிறுவனத்திற்கு அனுப்புமாறு கூறப்பட்டதனை நியூஸ்ஃபெஸ்ட் வெளிக்கொணர்ந்தது. குறித்த நிறுவனம் தனிநபர் வியாபாரமாக சீன பிரஜையால் 2017 செப்டம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி அனுப்ப முயற்சிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான பின்புலத்தில் 2018 செப்டம்பர் 3 ஆம் திகதி Fanya Silu நிறுவனத்தின் உரிமையாளரான சீன பிரஜை இராஜினாமாக் கடிதத்தை அனுப்பி தாம் அந்த நிறுவனத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். நிதி அனுப்பியமை தொடர்பாக தகவல் வெளியான போது அந்த நிறுவனத்தில் புதிய பணிப்பாளர் குழு நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக 2018 செப்டம்பர் 10 ஆம் திகதி அறிக்கை ஒன்றை விடுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் ஆலோசனையின் பிரகாரம் நிதி மோசடிப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது. எனினும், அதன் பின்னர் இது குறித்து தொடர்ந்தும் வெளிக்கொணரப்பட்ட விடயங்களை அடுத்து இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர். குறித்த சம்பவம் இடம்பெற்று 24 நாட்களின் பின்னர் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அந்த நிறுவனத்தில் ஓராண்டிற்குள் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக கணக்காய்வு நடத்தவுள்ளதாக தெரிவித்தது. எனினும், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்ப முயற்சிக்கப்பட்ட நிதி, ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற நிறுவனத்திடமிருந்தா அல்லது வைப்பிலிட முயற்சிக்கப்பட்ட நிறுவனத்தின் ஊடாகவா கிடைக்கவிருந்தது என்பது இதுவரை புதிராகவே உள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வில் அந்தப் புதிருக்கு உரிய முறையில் விளக்கமளிக்கப்படவில்லை. நிதி மோசடி தொடர்பாக தகவல் உறுதி செய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியானாலும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தமது நேர்மைத் தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காததும் சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது.