யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் CID விசாரணை

யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் CID விசாரணை

யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் CID விசாரணை

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2019 | 7:06 am

Colombo (News 1st) ஹபரணை – திகம்பதஹ, ஹிரிவடுன்ன கும்பிக்குளம் வனப்பகுதியில் உயிரிழந்த காட்டு யானைகளின் உடல் மாதிரிகள் 3 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம், பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்தியர் பீடம், சுகாதார திணைக்களத்தின் மிருக பரிசோதனை நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த மாதிரிகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் யானைகளின் உடல் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினூடாக விசாரணைகளை ​ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் நீதிமையம் தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய யானைகளின் உடலில் விஷம் கலந்துள்ளமை தெரியவந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக மையத்தின் தலைவர் சட்டத்தரணி ரவிந்தரநாத் தாபரே கூறியுள்ளார்.

இது குற்றவியல் குற்றமாகக் கருதப்படுவதாலும் பொது சொத்து தொடர்பான குற்றம் என கருதப்படுவதாலும் இது குறித்து முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோருவதாகவும் சுற்றாடல் நீதி மையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 9 மாதங்களில் 54 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 293 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 9 மாதங்களுக்குள் 217 யானைகள் உயிரிழந்ததாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்