இலங்கைக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெற்றி

by Staff Writer 03-10-2019 | 8:06 AM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் நேற்று (02) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது. கராச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 13 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அவிஷ்க பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தனுஷ்க குணதிலக மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி இரண்டாம் விக்கெட்காக 88 ஓட்டங்களைப் பகிர்ந்தது. லஹிரு திரிமான்ன 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தனுஷ்க குணதிலக அரைச் சதமடித்தார். 134 பந்துகளை எதிர்கொண்ட தனுஷ்க குணதிலக ஒரு சிக்ஸர், 16 பௌண்டரிகளுடன் 133 ஓட்டங்களைக் குவித்தார். பின்வரிசையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மொஹமட் அமிர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலளித்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஸமான் மற்றும் அபிட் அலி ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அரைச்சதங்களைக் கடந்ததுடன் முதல் விக்கெட்டுக்காக 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அபிட் அலி 74 ஓட்டங்களுடன் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இதன் பிரகாரம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 20 க்கு 20 போட்டி தொடர் நாளை மறுதினம் (05) ஆரம்பாகவுள்ளது.