ஜனாதிபதிக்கு பிரித்தானிய அமைச்சர் பாராட்டு

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் ஜனாதிபதிக்கு பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பாராட்டு

by Staff Writer 02-10-2019 | 4:53 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுவூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள் மற்றும் தெற்காசியா தொடர்பான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே பொதுநலவாய நாடுகள், ஐக்கிய நாடுகள் மற்றும் தெற்காசியா தொடர்பான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு தரிக் அஹமட் தமது பாராட்டுக்களைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகக் காணப்படும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கான சர்வதேசத்தின் பங்களிப்பையும் அவர் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாத சிந்தனை கொண்டவர்களின் வன்முறை செயற்பாடுகளை மதங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைகளுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு இதன்போது ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய அமைப்பினூடாக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் அபிவிருத்தி உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்