ட்ரம்ப் மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் Mike Pompeo

ட்ரம்ப்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் மைக் பொம்பியோ குற்றச்சாட்டு

by Staff Writer 02-10-2019 | 8:45 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணைகளுக்காக தமது ஊழியர் ஒருவர் கேலிக்குட்படுத்தப்படுவதாக அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குற்றஞ்சுமத்தியுள்ளார். விசாரணைக்குழு முன்னிலையில் 5 அதிகாரிகளை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை சாத்தியமற்றது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட தேவைக்காக ட்ரம்ப், யுக்ரைன் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஜனநாயகக் கட்சியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளுக்காக அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு வருகின்றது. 2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவிருந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு ட்ரம்ப், யுக்ரைன் ஜனாதிபதியை வலியுறுத்தியதாக எழுத்துமூலமான நகல் கடந்த வாரத்தில் வௌியாகியது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய குறித்த தொலைபேசி உரையாடலின்போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் பிரசன்னமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.