சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் சேவையை கைவிட்டுச் சென்றதாகக் கருதப்படும்

by Staff Writer 02-10-2019 | 6:57 PM
Colombo (News 1st)  ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதனால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, சுகயீன விடுமுறை இன்றி சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள், சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாகக் கருதப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ அறிவித்துள்ளார். ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் ஆகிய பிரிவுகளிலுள்ள அனைத்து ஊழியர்களும் சேவைக்கு சமூகமளிக்காத நாளில் இருந்து அவர்கள் சேவையை கைவிட்டுச்சென்றதாக கணிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இன்று காலை 12 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, காலி, சிலாபம், மஹவ, அவிசாவளை, ரம்புக்கன, வேயங்கொடை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை இந்த ரயில்கள் பயணித்துள்ளன. ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ஊடாக இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பணம் செலுத்தி பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுக்களுக்கான கட்டணத்தை மீள வழங்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுபெற்ற பின்னர், பயணச்சீட்டுக்களை ரயில் நிலையங்களில் சமர்ப்பித்து கட்டணத்திற்கான பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.