ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி: பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

by Staff Writer 01-10-2019 | 7:44 PM
Colombo (News 1st) ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இதனைக் கூறினார். ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு 6 ஆவது நாளாக இன்றும் தொடர்வதுடன், இன்றைய தினமும் பல ரயில் சேவைகள் இடம்பெறவில்லை. மாத்தறை ரயில் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். சாகரிகா, ருஹூணு மற்றும் காலு குமாரி ஆகிய மூன்று ரயில்களும் இன்று சேவையில் ஈடுபடவில்லை என்பதால், அலுவலக ரயிலை எதிர்பார்த்து வந்த பயணிகள் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேவேளை, கண்டி ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு விநியோக கருமப்பீடங்களும் ரயில் கட்டுப்பாட்டு அறையும் இன்று மூடப்பட்டிருந்தன. வார நாட்களில் கண்டியில் இருந்து மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் ரயில், கொழும்பு கோட்டை வரை மாத்திரமே இன்று பயணித்தது. அலுவலகத்திற்கு சென்று விட்டு ரயிலில் வீடு திரும்புவதற்காக இன்று மாலை வருகை தந்த பெரும்பாலான பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர். சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புகளுக்கு தீர்வு காண்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுடனான நேற்றைய கலந்துரையாடல் தோல்வியடைந்தமையால், தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.எம்.பீ.பிரீஸ் தெரிவித்தார்.