ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னம் மாற்றப்படுமா?

by Staff Writer 01-10-2019 | 9:12 PM
Colombo (News 1st) பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தற்போது தீர்மானம் மிக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பினரும் இன்று கருத்துத் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. சுமார் மூன்றரை மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் நீடித்த இந்தக் கலந்துரையாடல் முடிவுகள் இன்றி நிறைவடைந்தது. எதிர்வரும் 5 ஆம் திகதி மத்திய செயற்குழு மீண்டும் கூடவுள்ளதாகவும் சின்னம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தே அதிகம் பேசப்பட்டதாகவும் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானத்திற்கமைய, எதிர்வரும் சில நாட்களில் சின்னத்தை மாற்றுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவிடமிருந்து சுமூகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை, மொட்டு சின்னத்தை மாற்றுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இன்று கட்சித் தலைமையகத்தில் கருத்துத் தெரிவித்தார். சின்னத்தை மாற்றுவது பேச்சுவார்த்தை மூலம் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் நாட்டைப் பாதுகாப்பதற்காக எடுக்க முடியுமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு தாம் தயார் எனவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார். இவ்வாறான பின்புலத்தில், இரு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் தொடர்பிலான சில ஆவணங்களை சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு அனுப்பியுள்ளது.