அரச சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

by Staff Writer 01-10-2019 | 7:57 AM
Colombo (News 1st) அரச சேவையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. ரயில்வே திணைக்களத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று 6ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்களை சேர்ந்த ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் நேற்று 10 இற்கும் மேற்பட்ட அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது, இதனிடையே, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பள முரண்பாடுகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.