ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 7:25 am

Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்று (30)  நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில், ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறைவுசெய்ய இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும், அதற்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இவ் வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன் அதன் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

இதற்கிணங்க, கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (30) நள்ளிரவு வரை பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 1343 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 137 முறைப்பாடுகள் குறித்து ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஆணைக்குழு 22 முறைப்பாடுகளை விசாரித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக பிரதமர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நடப்பு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதலாவது ஆவணம் கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரான உபாலி அபேரத்ன செயற்பட்டிருந்தார்.

அத்துடன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜனி வீரவர்தன, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் P.A. பிரேமதிலக, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் லலித் ஆர் டி சில்வா மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் விஜய அமரசிங்க உள்ளிட்டோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்