ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் நாட்டை வந்தடைந்த அமெரிக்க விமானம்

by Staff Writer 30-09-2019 | 9:21 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய அமெரிக்காவின் Western Global Airlines நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் விமான நிறுவனமாக இந்த விமான நிறுவனம் பெயரிப்பட்டுள்ளது. பெல்ஜியம் லீஜ் நகரிலிருந்து கடந்த 28 ஆம் திகதி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. Western Global அமெரிக்க விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக முன்னிற்கும் இருவரில் ஒருவர் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான CIA அமைப்பில் பணியாற்றிய முக்கியஸ்தராவார். இந்த விமானம் எதற்காக வந்துள்ளது? விமானத்தில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன? இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக நாட்டின் பல நிறுவனங்களை தொடர்புகொண்டு வினவியபோதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் Western Global நிறுவனத்தின் விமானங்கள் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பங்களில் இலங்கையில் சேவை வழங்குநர்களின் தேவைகளுக்காகவே வந்ததாக குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், இந்த நிறுவனம் அமெரிக்காவின் பொருட்கள் விநியோக சேவைக்காக அனுமதி பெற்றுள்ள ஒரு சிவில் விமான சேவையாகும். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இவ்வாறான ஒரு விமானம் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி ஸிம்பாப்வேயின் ஹராரே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது. விமானம் ஜேர்மனியின் மியூனிக்கில் இருந்து தென்னாபிரிக்கா நோக்கி பறந்துகொண்டிருக்கும் போது தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கீழ் பகுதியில் படிந்திருந்த இரத்தக்கறை தொடர்பில் சந்தேகம் எழுந்தமையினால் அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது சடலம் ஒன்றும் பெருந்தொகையான தென்னாபிரிக்க நாணயத்தாள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தின் பணியாளர்களை தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னர் அவற்றை விடுவிப்பதற்கு ஸிம்பாப்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறான பெருந்தொகைப் பணம் வேறு நாடுகளில் அச்சிடுவதில்லை என இந்த நாணயத் தாள்கள் தொடர்பில் தென்னாபிரிக்க மத்திய வங்கி முதலில் குறிப்பிட்டது. எனினும், அந்தப் பணம் தமக்கு சொந்தமானது எனவும் அதனை விடுவிக்குமாறும் ஸிம்பாப்வே அதிகாரிகளிடம் பின்னர் கோரினர். இந்த பின்புலத்தில் Western Global நிறுவனத்தின் விமானம் ஒன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் ஏன் இலங்கைக்கு வந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு வித்திட்டுள்ளது. இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள விமானத்தில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன? மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி மூலம் கிடைத்த பெருந்தொகைப் பணத்திற்கு என்ன நடந்தது என நாம் தொடர்ந்தும் கேள்வி எழுப்பினோம். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சந்தர்ப்பத்தில் இந்த விமானம் மூலம் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் உபகரணங்களைக் கூட கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் உள்ளதல்லவா? அமெரிக்காவின் Western Global விமானம் கொண்டுவந்த, அல்லது இங்கிருந்து எதனை கொண்டுசெல்ல முயல்கின்றது?