கோட்டாபய ராஜபக்ஸவின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

by Staff Writer 30-09-2019 | 5:20 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸ பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கே இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை, கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஆகியன தொடர்பான தரவுகள் அடங்கிய ஆவணங்கள் குறித்து கோட்டாபய ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய பிரதிகளை அவரின் சட்டத்தரணி இன்று மன்றுக்கு சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.