வித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை

வித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2019 | 2:30 pm

Colombo (News 1st) மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் உள்ளிட்ட இருவருக்கு, யாழ். மேல் நீதிமன்றம் இன்று (30) மற்றுமொரு கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ளது.

9 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.

யாழ். புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவர் மது அருந்துவதற்காக சென்றிருந்தபோது கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளின்போது அவர்கள் குறித்த நபரை கொலை செய்தமை நிரூபணமாகியிருந்துள்ளது.

இதற்கமைய, குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று மரணதண்டனை விதித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் உடமையிலிருந்து 10,000 ரூபா பணத்தை கொள்ளையடித்தமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இருவரும் 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்