கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2019 | 2:38 pm

Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) தீர்மானித்துள்ளது.

இந்த மனுவை காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவில் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், ஆட்பதிவு ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டதாக முன்வைத்துள்ள விடயங்களுக்கு அமைய அவருக்கு இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன விநியோகிக்கப்பட்டாலும் அவர் இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்