சமரி அத்தபத்து சாதனை

சமரி அத்தபத்து சாதனை

by Fazlullah Mubarak 29-09-2019 | 8:45 PM

மகளிருக்கான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் சதமடித்த முதல் இலங்கை வீராங்கனையாக சமரி அத்தபத்து சாதனை ஏட்டில் பதிவானார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்டினியில் இன்று நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனை இலக்கை எட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் விளையாடுகின்றது. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதிகபட்சமாக பென் மூனி 113 ஓட்டங்களைப் பெற்றார். அதற்காக 61 பந்துகளை எதிர்கொண்ட 20 பௌண்டரிகளை விளாசினார். அலிசா ஹீலி 43 ஓட்டங்களையும் ஏஷ்லிக் கார்னர் 49 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களைக் குவித்தது. வெற்றி இலக்கான 218 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 27 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது. என்றாலும், சமரி அத்தபத்து சதமடித்து இலங்கை அணிக்கு நம்பிக்கையளித்தார். 66 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 12 பௌண்டரிகளுடன் 113 ஓட்டங்களைக் குவித்தார். எனினும், இலங்கை மகளிர் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதற்கமைய அவுஸ்திரேலிய மகளிர் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.