வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

by Staff Writer 28-09-2019 | 6:31 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது, பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இயற்கை அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிக்கையொன்றினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்கள் ஏற்படும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய, திறந்தவௌி மற்றும் மரங்களுக்கு கீழ் நிற்காமல், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன் வயல், தேயிலைத் தோட்டங்கள், மைதானங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்த வௌி பகுதிகளில் சஞ்சரிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களையும் சைக்கிள், உழுவு இயந்திரம் போன்ற வாகனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதற்கும் மின்கம்பிகள் உடைந்து வீழக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.