வறுமையை வென்று சாதித்த குகேந்திர பிரசாத்

by Staff Writer 28-09-2019 | 9:40 PM
Colombo (News 1st) வலி மிகுந்த போராட்டம் உச்சபட்ச சாதனைக்கு வித்திடுகிறது. அவ்வாறு வலியுடன் போராடி சாதித்த ஒருவர் தான் ஜெயக்காந்தன் குகேந்திர பிரசாத். புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரியில் உயர் தரத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்கும் ஜெயக்காந்தன் குகேந்திர பிரசாத் சர்வதேச அரங்கில் சாதிக்கும் கனவில் காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரராவார். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியினூடாக தன்னுடைய ஓட்டப்போட்டிகளுக்கான கனவை ஆரம்பித்த குகேந்திர பிரசாத் இன்று தேசிய மட்டத்தை வெற்றிகொண்ட வீரராகத் திகழ்கின்றார். மத்திய மாகாண இளைஞர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஓட்டப்போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று சாதித்த குகேந்திர பிரசாத்திற்கு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 62 ஆவது கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் களம் அமைத்துக் கொடுத்தது. இதில் ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஐந்தாமிடத்தைப் பெற்று பின்தங்கிய போதிலும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி 10,000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். குகேந்திர பிரசாத் தேசிய ரீதியிலும் சாதனையாளராக திகழ்ந்தாலும் அவரது குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளியின் தலைப்பிள்ளையாக பிறந்து, வறுமையை வென்று சாதித்துள்ள குகேந்திர பிரசாத் உரிய பாதணியொன்று இல்லாமல் இத்தனை பெரிய இலக்கை அடைந்துள்ளார். தனது நண்பரின் பாதணியை இரவல் பெற்று, அதனைக்கொண்டு பந்தயங்களில் ஓடி , தோட்டப்புறங்களில் வெறும் தரையில் பயிற்சி பெற்று தேசிய அரங்கில் பிரகாசிப்பதென்பது அத்தனை இலகுவான காரியமல்ல!