பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது: 7 ரயில்கள் மாத்திரமே கோட்டை நோக்கி பயணித்தன

by Staff Writer 28-09-2019 | 3:31 PM
Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பின் மத்தியில் இன்று காலை 7 ரயில்கள் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி, மஹவ, வேயங்கொட, காலி, அவிசாவளை மற்றும் சிலாபத்தில் இருந்து 7 ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்தார். வழமையாக அதிகாலை வேளையில் கோட்டை ரயில் நிலையத்திற்கு 25 ரயில்கள் வருகை தருகின்றன. இன்று மாலையும் 7 ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்