சஜித் தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் விக்னேஸ்வரன்

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

by Staff Writer 28-09-2019 | 9:14 PM
Colombo (News 1st) அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தமை தனிப்பட்ட ரீதியில் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சஜித் பிரேமதாசவின் கொழும்பு ரோயல் கல்லூரிக் கல்வியும் அவரின் பௌத்த மதப் பின்னணியும் லண்டன் பொருளாதாரக் கல்லூரி மற்றும் வேறு கல்லூரிகளிலும் பெற்ற கல்வியும் அவருக்கு “வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற மனோநிலையைக் கொடுத்திருக்கும் என்று நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார். அத்துடன், தருண சவிய மூலம் இளைஞர்களுடன் சஜித் பிரேமதாச வெற்றிகண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ஜனசுவய, சசுனட அருண போன்றவற்றையும் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஒரு திடமான பௌத்த பின்னணி இருப்பதும் வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் அண்மையில் கத்தரிக்கப்பட்டிருந்தாலும், சஜித் பிரேமதாச தனது சிறப்பினை வெளிக்காட்டக்கூடியவர் என்பதே தனது கருத்து எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.