பல்கலைக்கழகங்களுக்குள் செயற்பாட்டு அரசியலுக்கு தடை விதிக்குமாறு மிலிந்த மொரகொட யோசனை

பல்கலைக்கழகங்களுக்குள் செயற்பாட்டு அரசியலுக்கு தடை விதிக்குமாறு மிலிந்த மொரகொட யோசனை

பல்கலைக்கழகங்களுக்குள் செயற்பாட்டு அரசியலுக்கு தடை விதிக்குமாறு மிலிந்த மொரகொட யோசனை

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2019 | 8:59 pm

Colombo (News 1st) பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளை 5 வருடங்களுக்கு தடை செய்வது தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என Pathfinder அமைப்பின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் மேடையாக செயற்படுவது உண்மையென்ற போதிலும், துரதிர்ஷ்டவசமாக இதற்குள் வன்முறை மற்றும் சித்திரவதை காணப்படுவதாக அறிக்கையொன்றின் ஊடாக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

அது நாட்டின் உயர் கல்வித்துறையை அழித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களை புத்திசாதுர்யமான சபையாக மாற்றும் தீர்மானமாக, அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் செயற்பாட்டு அரசியலை பல்கலைக்கழகத்திற்குள் தற்காலிகமாக நிறுத்துவது சிறந்தது எனவும், அதனை வேட்பாளர்கள் தமது கொள்கைகளுக்குள் உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலையை விட்டுச்செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் கட்டாயமாக இராணுவ சேவையில் ஈடுபடுத்துவது சிறந்தது என ஏற்கனவே கூறப்பட்ட கருத்துடன் இணங்க முடியும் என மிலிந்த மொரகொட அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் யோசனை முன்வைத்துள்ளார்.

இனம், மதம் அல்லது சமூக நிலை போன்ற எவ்வித பேதங்களுமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவது நோக்கமாக அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவம், விமானப்படை, கடற்படை அல்லது பொலிஸ் சேவையை சிறிது காலத்திற்கேனும் கட்டாயப்படுத்துவது, தற்போது சிதைவடைந்துள்ள சமூகத்தை இணைக்கும் எண்ணக்கரு எனவும், அதன் ஊடாக நாட்டை ஒன்றிணைக்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்